எமது நாடு எந்தவொரு வெளிநாட்டிற்கும் அடிமை அல்ல. அரசுக்கு எதிரான சக்திகளுக்கும், நாடுகளுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக வேலி கட்டவேண்டும் என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்து பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இரண்டாவது தடவையாகவும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக நேற்று சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் கூடியது. பிரதி பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக பிரேரணையை சமர்ப்பித்துப் பேசினார்.
அரசியல் எதிரிகள்மீது அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே தாக்குதல்களை மேற்கொள்வது வேடிக்கையான விடயமாக இருக்கின்றது என்பதுடன் அரசாங்கத்தின் அராஜகத்தை கட்டவிழ்த்து விடுவதற்கே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகின்றது என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணைமீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மன்னாரில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர்மீது அமைச்சரொருவரின் அடியாட்கள் தாக்குதல் நடத்தியமையினால் மன்னாரில் வர்த்தகர்கள் கடைகளை மூடி எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அமைச்சரொருவரின் அடியாட்களின் செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் பொலிஸார், நீதிவானிடம் மகஜரை கையளித்துள்ளனர். அவர்கள் வழங்கிய உத்தரவை அடுத்தே கடைகள் மீண்டும் நேற்று நண்பகல் திறக்கப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணிய இரண்டு சுங்க உத்தியோகத்தர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.யுத்த நிறுத்த உடன்படிக்கை காலப் பகுதியில் குறித்த இரு சந்தேக நபர்களும் பொட்டு அம்மானைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொருட்களை அனுப்பி வைத்ததாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் பொருட்களை வன்னிக்கு எடுத்துச் செல்ல விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றில் முகவர்களை புலிகள் பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் நியூயோர்க்கிற்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி பாலித கோஹன நாளை புதன் கிழமை கனடா டொரன்டோ பல்கலைக்கழககத்தின் விரிவுரை ஒன்றை நிகழ்த்த இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட விரிவுரை பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று இயக்குனர் மார்கிரட் மெக்கோன் அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாலித்த ஹோகன விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாலேயே தனது விரிவுரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றம் சுமத்திப்பட்டுள்ள நாடொன்றின் பிரதிநிதியெனக் குறிப்பிட்டு, கனடாவில் உள்ள மாவணர்கள் பாலித ஹோகன குறிப்பிட்ட விரிவுரையில் பங்கெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வருமானத்தை விடவும் கடன் கொடுப்பனவுகள் அதிகரித்திருப்பதனால் நாடு இன்று வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாக எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தாய்நாட்டின் இறைமைக்கும் பௌதீக ஒருமைப்பாட்டுக்கும் எந்தவித பங்கமும் ஏற்பட விடமாட்டோம் என பிரச்சாரம் செய்துவரும் அரசாங்கம் நாட்டையும் திறைசேரியையும் வெளிநாடுகளில் அடகு வைத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த அரசாங்கத்தின் சில செயற்பாடுகளினால் நாட்டு மக்கள் பாரிய கடன்சுமையை எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார். ஐக்கியதேசிய கட்சி ஆட்சி அமைத்த உடன் மக்களை இந்தக் கடன் சுமையிலிருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். அன்று தொன் ஜூவான் தர்மபால இலங்கையை போர்த்துகேயரிடம் ஒப்படைத்ததனைப் போன்று இன்று மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு வங்கிகளுக்கு திறைசேரியையும் நாட்டையும் ஒப்படைத்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார் என லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
பலமான குடும்ப உறவே பலமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளம். இதனைக் கொள்கையாகக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமென இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும் ஜனாதிபதியின் புதல்வரும் வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை சியபோபுர சிங்கப்பூர் நட்புறவு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய மகளிர்தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்நாட்டில் இளைஞர்கள் படையிலிருந்து விடுமுறைக்கு வீட்டிற்கு வரும்போதும் பாடசாலை பல்கலைக்கழ கத்துக்குப் போய் மீள வீடு திரும்பும்வரை பெற்றோர் அஞ்சி நடுங்கிய யுகம் ஒன்றிருந்தது. இதன்போது உள, உடல் ரீதியில் எவரும் பீடனைக்குள்ளானவர்கள் எமது தாய்மாரே. எமது சகோதரரும் கடற்படை யில் கடமைபுரிவதால் பயங்கரவாத யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எமது பெற்றோரும் இத்தகைய தாக்கங்களுக்கே உள்ளானார்கள் என என்னால் கூறமுடியும். இலங்கையைப் பொறுத்தவரை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பினை பெண்களே வழங்குகின்றனர். வீட்டின் பொருளாதாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பவற்றை இதில் முக்கியமாகக் குறிப்பிட முடியும். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு தற்போது அமைதி சூழல் நிலவுகிறது. இதனால் நிம்மதியடைந்தவர்கள் எமது தாய்மாரே. இதனால் எமது கலாசாரம் தேசியத்துவம் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. எனது முன்னேற்றத்தில் எனது பெற்றோரினது பங்களிப்பு முக்கியமானது. எனது தாயாரிடம் நான் கற்ற பாடமே எனக்குப் பெரிதும் உந்துதலளித்தது. அரசியலில் எனது தந்தையாரின் வழிகாட்டல் எனக்கு உதவியது. இதுவே எனக்கான அரசியல் சூழலை உருவாக்கித் தந்தது. இந்நாட்டில் பெண்களின் பொருளாதாரம் சக்திபடுத்தப்பட வேண்டும். அரசியலில் பொருளாதார ரீதியில், தொழில்நுட்பத்துறையில் பெண்கள் முன்னேற்றப்பட வேண்டும். அவர்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். அத்துடன் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையிலான உறவும் பலப்படுவது மிகவும் முக்கியமாகும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையிலான பலமான உறவு இல்லாவிட்டால் நாம் எத்தகைய அபிவிருத்தியை ஏற்படுத்தியும் அதில் பயனில்லை என்பதே எனது கருத்து. குடும்ப உறவு பலப்படுத்தப்படல், பொறுமை இவையிரண்டும் நல்ல குடும்பம், நல்ல பிள்ளைகள் உருவாக மிகவும் அவசியமாகும். குடும்பம் பலம்பெறும்போது சமூகம் பலம்பெறுகிறது. சமூகம் பலம் பெறும்போது கிராமம் பலம்பெறுகிறது. கிராமம் பலம்பெறும்போது நாடு பலம்பெறுகிறது. நாம் பலம்மிக்க நாடொன்றைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் உழைப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படும் நந்திக்கடல் பிரதேசத்தில் ராணுவம் நினைவுச் சின்னம் எழுப்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றது.
ஜெனரல் பொன்சேகா கைதாகி இன்றுடன் ஒருமாதமாகியுள்ள நிலையில் இன்னும் ஒரிரு தினங்களில் அவருக்கெரிரான வழக்கு இராணுவ நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வாக்குமூலங்கள் பெறப்பட்டிருப்பதுடன், சாட்சியங்களின் தொகுப்பு இராணுவத் தளபதியிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிராக பதியப்பட்டுள்ள 5 குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இராணுவ சட்டவல்லுனர்கள் ஆராந்ய்து வருவதாகவும் இராணுவ சட்டவல்லுனர்களின் பரிந்துரையை அடுத்து இராணுவத் தளபதி இராணுவ நீதிமன்றிற்கான சிபார்சுகளை விடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இராணுவத் தளபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள சாட்சியங்களின் தொகுப்பில் 22 இராணுவத்தினர், 7 பொலிஸார், 6 பொதுமக்கள் என 35 பேரது சாட்சியங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜெனரல் பொன்சேகாவின் விடுதலை வேண்டி இன்று ஹட்பாக் கோணரில் கூட்டமொன்று நடைபெறவிருக்கிறது. ஜெனரல் சரத் பொன்சேகாவின் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து இந்தக் கூட்டத்தை நடத்தவுள்ளன.
இந்தக் கூட்டத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா,மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அதே நேரம் ஜெனரல் பொன்சேகா அவரது உறவினர்களுடன் உரையாடும் பொருட்டு அவருக்கு ஸ்கைப் வசதிகள் அனுமதிக்கப்பட்டிருந்தது. அவ்வசதிகள் மேலதிகமானவை என நேற்றிலிருந்து மறுக்கப்பட்டபோது அவ்வசதி தொடர்ந்தும் தனக்கு வழங்கப்படவேண்டும் என ஜெனரல் பொன்சேகா உண்ணாவிரத் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தார். இந்நிலையில் இன்றிலிருந்து அவரது மனைவி அவரை பார்வையிடச் செல்லும்போது கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் சென்று அவரது மகள் மாருடன் பேசுவதற்கான தொடர்புகளை ஏற்படுத்தமுடியும் என இராணுவப் பேச்சாளர் தெரிவிததுள்ளார்.
கொழும்பு வேரை வாவியருகில் வசிப்போர்க்கு புதிய வீடுகளை வழங்கும் திட்டத்தின்கீழ் அடுத்த மாதமளவில் மேலும் 250வீடுகள் கையளிக்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின்கீழ் வேரை வாவியை அண்மித்த கொம்பனித்தெரு ரயில்பாதையின் இருபுறமும் வசிக்கும் குடும்பங்களுக்கு 1000வீடுகள் வழங்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் புனித பூமி அபிவிருத்தியமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஏற்கனவே 500வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு 275வீடுகளில் ஒரு மாதத்திற்கு முன்னர் மக்கள் குடியேற்றப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். புதிய தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இந்த வீட்டுத் திட்டத்தை துரிதகதியில் மேற்கொண்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் புனித பூமி அபிவிருத்தியமைச்சர் தினேஸ் குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் தயாநந்த திசாநாயக்க மற்றும் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சி செயலாளர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலை எதிர்வரும் பன்னிரண்டாம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முதலாவது சந்திப்பாகும். இதன்போது நாடாளுமன்ற தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்கள் இலத்திரனியல் ஊடகங்களில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான நேர ஒதுக்கீடு குறித்து கடைபிடிக்க வேண்டிய முறைமை தொடர்பாக ஆராயப்படவுள்ளது. அதேவேளை, வாக்குகளை புதிய முறையில் எண்ணுவது தொடர்பிலும் கட்சி காரியாலங்களை ஸ்தாபிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொருபுறம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் பொதுமக்களை தெளிவுபடுத்தும் புதிய முறைமையொன்றினை அமுல்படுத்தவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் தேர்தலில் மாவட்ட ரீதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியல் தபால் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. எனினும் இந்த முறை அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் வாக்களிப்பு மத்திய நிலையங்களில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாரிய அளவில் நிதியினை சேமிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக இதுவரை பதியப்பட்ட வாக்குமூலங்கள் எதிர்வரும் 18ம் திகதி கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். லசந்தவின் படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 17பேருள் 11பேர் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் மீண்டும் இராணுவ சேவைக்கு உள்வாங்கப்பட்டும் உள்ளனர். எஞ்சியுள்ள 6பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்களே. அவர்கள் மேலும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த 4ம் திகதி கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் லசந்தவின் படுகொலை தொடர்பான சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. எதிர்வரும் 18ம் திகதியும் இதேபோன்று சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். லசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகளின் ஊடாக குற்றவாளி யார் என்பதை கண்டறிவதற்கு சான்றுகள் ஏதேனும் கிடைத்துள்ளனவா? என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, இதுவரை கிடைத்துள்ள சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை கண்டறிவதற்குரிய சரியான விசாரணைக ளையே பொலிஸார் நடத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக சரத் பொன்சேகாவுக்கு எதிராகப் பதியப்பட்ட சாட்சியங்கள் அடங்கிய முழுமையான அறிக்கை இராணுவத் தளபதியிடம் இந்தவாரம் கையளிக்கப்படவிருப்பதாக இராணுவப்பேச்சாளர் மேஜர்ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். 10 சிவிலியன்கள் உட்பட 31 பேரிடமிருந்தும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் (டெக்னிகல் எவிடன்ஸ்) தொழில்நுட்ப சாட்சியங்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேற்படி சாட்சியங்களின் அடிப்படையில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றில் விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். இதேபோன்று சமகாலத்தில் சரத் பொன்சேகாவுக்கும் அவருடன் தொடர்புடைய தனுன, அசோக்கா ஆகியோருக்கு எதிராகவும் பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக சாதாரண சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்கள், வாக்கு மூலங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளதுடன் இவையும் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவுள்ளதென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவ நீதிமன்றத்தில் சரத் பொன் சேகாவின் விசாரணைகள் நடைபெறும் போது ஊடகங்களை அனு மதிப்பீர்களா? என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது? அவ்வாறான ஒரு நடைமுறை உலகில் வேறு எங்கும் நடந்ததாக தெரியவில்லை. எனினும், விசாரணைகளின் முடிவுகள் குறித்து இராணுவப் பேச்சாளர் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என்றார். அத்துடன், சரத் பொன்சேகா, மருமகன் தனுன, அவரது தாயார் அசோக்கா ஆகியோர் மீதான பண பரிமாற்று மோசடி தொடர்பான விசாரணைகள் யாவும் வெளிப்படைத் தன்மையாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹ_லுகல்லவும் கலந்து கொண்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது ஆட்சிக் காலத்திற்காக பதவியைப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல்களின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் முறைமை நிர்வாக முறைமை ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட நிர்வாகக் கட்டமைப்பு தொடர்பில் ஆராயப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது ஆட்சிக் காலம் முழுமையாக நாட்டின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை இராணுவ புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் இயக்குனர் லக்ஸ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளதுடன் இவ்வாறான பொறுப்புணர்சியற்ற செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்த்துக்கொள்வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக பதிலளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன், லசந்த கொலை தொடர்பாக 17 இராணுவ அதிகாரிளும் 2 சிப்பாய்களும் விசாரணைக்குட்படுத்தப்பட்டதுடன் அவர்களில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் 6 தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொன்சேகா மீதான விசாரணைகள் முடிவடையும் தறுவாயை எட்டியுள்ளதாக தெரிவித்த அவர், சாட்சியங்களின் தொகுப்பு அடுத்தவாரம் இராணுவத்தளபதியிடம் கையளிக்கப்படும் எனவும் பணப்பரிமாற்றம் மற்றும் சில குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சிவில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார்.
இராணுவப் புலனாய்வுத்துறை தடைசெய்யப்பட்டுள்ளதாக ஊடகவியாலளர் ஒருவர் கேட்டபோது மறுதலித்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட இராணுவப் பேச்சாளர் இராணுவப் புலனாய்வுத்துறையின் சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் இராணுவ நீதிமன்றில் ஜெனரல் பொன்சேகாவின் வழக்கு விசாரிக்கப்படும்போது ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா எனக் கேட்கப்பட்டபோது உலகில் எங்கும் அவ்வாறான நடைமுறை இல்லை எனவும் இது இராணுவத்தின் உள்வீட்டு விவகாரம் எனவும் தெரிவித்துடன், இது தொடர்பாக ஜெனரல் பொன்சேகா வேண்டுகொள் விடுத்தால் அதை இராணுவத் தளபதி பரிசீலிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷ குடும்பத்தினர் அரசியலை பயன்படுத்தி முறையற்ற விதத்தில் பணம் சம்பாதிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பிரதான வேட்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ குடும்பத்தாருக்கு பாரியளவு சொத்துக்கள் காணப்படுவதாக சிலர் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் முறையற்ற விதத்தில் தமது குடும்ப உறுப்பினர்கள் ஓர் தேனீர் கடையைக் கூட வைத்திருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தமது சொத்துக்களை மக்கள் சேவைக்காக விற்பனை செய்த தமது தந்தையின் தூய அரசியல் பாதையை தாம் பின்பற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வத்தளைப் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.